மக்களின் ஆதரவு இருந்ததால் பொருளாதார மீட்பு முயற்சியில் வெற்றி: இலங்கை அதிபர் உரை

கொழும்பு: பிப்.5
‘பல இன்னல்கள் எதிர்கொண்ட போதிலும், மக்களின் உறுதியான ஆதரவு காரணமாக பொருளாதார மீட்பு முயற்சிகளில் நாடு வெற்றி கண்டுள்ளது’ என இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுதந்திர தின உரையில் குறிப்பிட்டார். இலங்கையின் 76வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடிய போது நாடு திவாலானதாக முத்திரை குத்தப்பட்டது.
அதைத் தொடர்ந்து விரிவான நீண்ட கால தேசிய மறுகட்டமைப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதில் பல இன்னல்கள் இருந்த போதிலும், அந்த சிரமங்களை சகித்துக் கொண்ட இலங்கை மக்களின் உறுதியான ஆதரவின் காரணமாக தற்போது பொருளாதார மீட்பு முயற்சிகளில் முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.
இதே பாதையில் நாம் முன்னேறிச் சென்றால் கஷ்டங்கள் மறைந்து விடும். வாழ்க்கை எளிதாகும். பொருளாதாரம் வலுவடையும். இவ்வாறு அதிபர் விக்ரமசிங்கே கூறி உள்ளார்.