மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியது

கொள்ளேகால்- ஆக.3 -சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா குந்தூருபெட்டா கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சிறுத்தை நடமாடி வந்தது. மேலும் அந்த சிறுத்தை கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது. இதனால் அந்த சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் கிராம மக்கள், வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் கிராமத்தையொட்டிய வனப்பகுதியில் இரும்பு கூண்டு வைக்கப்பட்டது.மேலும் சிறப்பு படை அமைக்கப்பட்டு அந்த சிறுத்தையை தேடும் பணியும் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அந்த சிறுத்தை மல்லேனஹள்ளி கிராமம் அருகே ஒரு சிறுவன் மீது தாக்குதல் நடத்தியது.
கிராமத்தில் சிறுத்தை நடமாட்டம் அதிகமானதால் கிராமத்தில் வசித்து பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் இருந்தனர். இதையடுத்து கிராமத்தை சுற்றிலும் 60 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. மேலும் 2 டிரோன் கேமராக்கள் மூலம் சிறுத்தையை தேடும் பணி நடந்தது. 70-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் வனத்துறையினர் வைத்த இரும்பு கூண்டில் நேற்று ஒரு சிறுத்தை சிக்கியது. பின்னர் அந்த சிறுத்தையை வனத்துறையினர் இரும்பு கூண்டுடன் மீட்டு அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.
இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பிடிபட்டது 8 வயது ஆண் சிறுத்தை ஆகும். இந்த சிறுத்தை தான் சிறுவனை தாக்கி உள்ளது. மேலும் 9 ஆடுகளை வேட்டையாடி இருக்கிறது. பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது. அதன் கால் தடங்களை வைத்து இதை உறுதி செய்தோம்’ என்று கூறினார்.