மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் உத்தவ் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன்

தானே, நவ. 13- தானேயில் உத்தவ் சிவசேனா அலுவலகம் இடிக்கப்பட்ட சம்பவத்தில் உத்தவ் தாக்கரே விடுத்த மிரட்டல் வெறும் புஸ்வாணம் என்றும் அந்த மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் என்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார். தானே, மும்ப்ராவில் உத்தவ் அணியினரின் கட்சி அலுவலகம் இருந்தது. சனிக்கிழமை ஷிண்டே அணியினர் இந்த அலுவலகத்தை இடித்து தள்ளினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.
இதனை அறிந்த உத்தவ் தாக்கரே அதை பார்வையிட அன்று மாலை மும்ப்ரா சென்றார். அவருடன் அவருடைய அணியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் சென்றனர். ஆனால் ஷிண்டே அணியினர் அங்கு கலாட்டா செய்தனர். உத்தவ் தாக்கரேயையும் அவருடன் வந்தவர்களையும் அலுவலகம் இருக்கும் இடத்துக்கு செல்லவிடவில்லை. இதனால், இடிக்கப்பட்ட அலுவலகத்துக்கு சில மீட்டர் தொலைவு முன்பாகவே உத்தவும் மற்றவர்களும் அங்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டனர். இதனால் அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர். அதே நேரத்தில் தங்கள் அலுவலகம் இருந்த இடத்தை ஷிண்டே அணியினர் ஆக்கிரமித்துள்ளதாக உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டினார். மேலும் தங்கள் கட்சி இதனை
பொறுத்துக்கொள்ளாது என்றும் வேடிக்கை பார்க்காது என்றும் அவர் எச்சரித்தார். இது பற்றி நேற்று தீபாவளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தானே வந்திருந்த முதல்வர் ஷிண்டே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது: கட்சி அலுவலகம் இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உத்தவ் தாக்கரே மிரட்டல் விடுக்கும் விதமாக எச்சரித்துள்ளார். இந்த மிரட்டல் எல்லாம் வெறும் புஸ்வாணம் ஆகும். அதற்கு நாங்கள் அஞ்சமாட்டோம். சனிக்கிழமையன்று மும்ப்ராவில் கட்சி அலுவலகம் இருந்த இடத்தைப் பார்வையிட உத்தவ் தாக்கரே வந்திருந்தார். ஆனால் அந்த இடத்தை பார்க்க முடியாமல் அவர் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. தாக்கரே, மும்ப்ராவுக்குச் சென்றார். ஆனால் எங்கள் கட்சியின் தொழிலாளர் அணியினர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி அவருக்கு எதிராக கருப்புக் கொடிகளையும் காட்டினர். இதனால் நிலைமை பதற்றமானது. இதனால் உத்தவ் தாக்கரேவும் அவரது கட்சியினரும் அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டனர். இடிக்கப்பட்ட இடத்தை அவர்களால் பார்க்க முடியவில்லை. தாக்கரேவின் வருகையின் போது மும்ப்ரா மக்கள் தங்கள் சக்தியை வெளிப்படுத்தினர். மக்கள் சக்திக்கு முன்பு எதுவும் செயல்படாது. உத்தவ் அணியை சேர்ந்த பல மூத்த தலைவர்கள் அவருடன் இருந்தனர்.
ஆனால் சிவசேனா தலைவர் நரேஷ் மாஸ்கே அவர்களை போகவிடாமல் தன் ஆதரவாளர்களுடன் கடும் எதிர்ப்பை தெரிவித்தார். சிவசேனாவினர் பட்டாசுகளை வெடித்து உத்தவ் தாக்கரேயையும் அவர்களுடன் வந்தவர்களையும் விரட்டியடித்தனர்.
எதிர்ப்பு பலமாக இருந்ததால் உத்தவ் தாக்கரேயும் மற்றவர்களும் அவசரமாக பின்வாங்கிச் சென்றனர். சமீபத்தில் நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் உத்தவ் தாக்கரே அணி ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. அடுத்த தேர்தலில் 10வது இடத்திற்கு தள்ளப்படும். இது போல எப்போதும் மக்கள் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.
இப்போது கிளை அலுவலக பிரச்னை தொடர்பாக பேசி பண்டிகை சூழ்நிலையை கெடுக்க மாட்டேன். அரசின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எனது பணியின் மூலம் பதிலளிப்பேன். இவ்வாறு முதல்வர் கூறினார்.