“மக்கள் முன்பாக தலைவணங்குகிறோம்” – மோடி

புதுடெல்லி:டிச. 4:மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைத்த மக்களுக்கு முன்பாக தலைவணங்குகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தல்களில் நல்லாட்சி, வளர்ச்சிக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்துள்ளனர். பாஜகவை அமோக வெற்றி பெற செய்துள்ளனர். இந்த 3 மாநில மக்களின் பெருவாரியான ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பாஜகவின் வெற்றிக்காக உழைத்த அனைத்து தொண்டர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறேன்.
ஒவ்வொரு தொண்டரும் மிகச் சிறப்பாக செயல்பட்டனர். பாஜகவின் வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல தொண்டர்கள் ஓய்வின்றி உழைத்தனர். அதற்கான பலன் இப்போது கிடைத்திருக்கிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலில் பாஜகவை வெற்றி பெற வைத்த மக்கள் முன்பாக தலைவணங்குகிறோம்.
தெலங்கானாவில் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. வரும் காலத்தில் பாஜகவின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். பாஜக, தெலங்கானா இடையிலான உறவு மிகவும் உறுதியானது. இந்த உறவை யாராலும் உடைக்க முடியாது. தெலங்கானாவில் பாஜகவுக்காக உழைத்த அனைவரையும் பாராட்டுகிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.