மடாதிபதிக்கு செப். 14 வரை சிறை

சித்ரதுர்கா, செப்.5 –
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் போக்சோ வழக்கில் கைதான முருக மடத்தைச் சேர்ந்த மடாதிபதி ஸ்ரீசிவமூர்த்தியை 9 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி இவர் செப்டம்பர் 14ஆம் தேதி வரை சிறையில் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது
கைது செய்யப்பட்டு கடந்த 4 நாட்களாக போலீஸ் காவலில் இருந்த மடாதிபதி சிவமூர்த்தியின் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து இன்று காலை நகரின் 2வது கூடுதல் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஆஜரான மடாதிபதியின் மனுவை விசாரித்த சித்ரதுர்கா 2வது கூடுதல் நீதிமன்றம், முருகஸ்ரீயை செப்டம்பர் 14ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது. சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி கைது செய்யப்பட்ட மடாதிபதி நேற்று மடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டார் அவர் தங்கியிருந்த அறையில் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பரசுராம் தெரிவித்துள்ளார்.
பிரிவு 164 இன் கீழ் பாதிக்கப்பட்ட சிறுமிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையின் நகல், சீலிடப்பட்ட உறையில் விசாரணை அதிகாரியின் கைகளில் உள்ளது. இந்தக் காரணிகளின் அடிப்படையில், விசாரணையை முடுக்கிவிட்ட போலீஸார், பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் இடத்துக்குச் சென்றுள்ளனர். அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்