மணிப்பூரில் பறந்த “மர்ம” பொருள் – விமான சேவை முடக்கம்

இம்பால்: நவ 20- மணிப்பூர் தலைநகர் இம்பானில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் திடீரென மர்மப் பொருள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமானச் சேவையும் முடக்கப்பட்டது.
பொதுவாக வானத்தில் பறக்கும் தட்டுகள் அல்லது அடையாளம் தெரியாத மர்மப் பொருட்கள் அவ்வப்போது வானில் தென்படுவதாகத் தகவல் வெளியாகும். இவை பெரும்பாலும் அமெரிக்கா அல்லது மேற்குலக நாடுகளில் தான் நடக்கும்.
ஆனால், அதேபோன்ற ஒரு சம்பவம் இப்போது நமது நாட்டிலும் நடந்துள்ளது. மணிப்பூரில் தலைநகர் இம்பானில் உள்ள ஏர்போர்ட்டில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
மணிப்பூர் ஏர்போர்ட்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள பிர் திகேந்திரஜித் ஏர்போர்ட் கட்டுப்பாட்டில் இருக்கும் வான்வெளியில் நேற்று திடீரென அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் ஒன்று பறந்துள்ளது. இதையடுத்து உடனடியாக பாதுகாப்பு கருதி விமானச் சேவை நிறுத்தப்பட்டது. அங்கே என்ன நடந்ததது. அந்த யுஎப்ஓ என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். நேற்று பிற்பகல் 2.30 மணியளவில், இம்பால் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டு அறையிலிருந்து ஒரு அவசர அழைப்பு வந்துள்ளது.. அங்குள்ள விமான கட்டுப்பாட்டு அறைக்கு மேலே அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் இருப்பதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
வெள்ளை நிறத்தில் மர்மப் பொருள்: ஏடிசி கோபுரத்தின் மொட்டை மாடியில் இருந்து பார்த்தாலே அந்த மர்மப் பொருள் தெரிந்தது.. விமான நிறுவன ஊழியர்கள் பாதுகாப்புப் படையினர், பொதுமக்கள் எனப் பலரும் இதைப் பார்த்துள்ளனர், அந்த மர்மப் பொருள் வெள்ளை நிறத்தில் இருந்தது. அது டெர்மினல் கட்டிடத்தின் மேல் பறந்து.. ஏடிசி கோபுரத்திற்கு மேலே தெற்கு நோக்கி நகர்ந்து சிறிது நேரம் அங்கேயே நின்றது. பின்னர் அது ஓடுபாதையின் தென்மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. ஓடுபாதைக்கு மேலே இருந்ததால் அங்கே சுற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாலை 4.05 மணியளவில் அது அப்படியே காணாமல் போனது. இந்தச் சம்பவத்தில் இம்பால் விமான நிலையத்தில் விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்த மர்ம பொருளால் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டதால் விமானங்கள் கிளம்பவும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், மாலை 3.55 மணி முதல், இம்பால் வான்வெளியை அதிகாரிகள் சோதனை செய்தனர். எதாவது அச்சுறுத்தல் இருக்கிறதா என்பது குறித்து மாலை 5.35 மணி வரை அதிகாரிகள் சோதனை செய்தனர். எந்தவொரு அச்சுறுத்தல்களும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே இம்பால் விமான நிலையத்தில் விமான சேவையை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. விமானச் சேவை தொடக்கம்: மாலை 5.45 மணியளவில் தான் அங்கே விமான சேவை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டது. பாதுகாப்பு எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்ட நிலையில், விமான சேவை வழக்கம் போல ஆரம்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 5.50 மணி முதல் அங்கே விமான சேவை மீண்டும் இயக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மர்மப் பொருள் வான்வெளியில் மாயமடைந்துவிட்ட போதிலும், அது என்ன பொருள் என்று யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. இது தொடர்பாகப் பாதுகாப்புப் படை அல்லது விமான நிலைய ஆணையம் தரப்பில் இருந்தும் எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.