மணிப்பூரில் பாதுகாப்பு படை மீது தொடர் தாக்குதல்

இம்பால்:ஜன.3- மணிப்பூரில் பெரும்பான்மையினராக இருக்கும் மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க எதிர்ப்பு தெரிவித்து குகி பழங்குடியின மக்கள் கடந்த ஆண்டு மே மாதம் 3-ந் தேதி பேரணியில் ஈடுபட்டனர். அந்த பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. பின்னர் அது கலவரமாக மாறி மாநிலம் முழுவதும் பரவியது. இந்த கலவரத்தில் 180-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.கலவரம் தொடங்கி இன்றுடன் 9 மாதங்கள் ஆகிறது. ஆனால் அங்கு இன்னும் வன்முறை முழுமையாக ஓய்ந்தபாடில்லை.
புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் தவுபால் மாவட்டத்தில் உள்ள லிலாங் சிங் ஜாவ் பகுதியில் மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியதில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பலியாகினர்.அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு கூடுதல் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தின் எதிரொலியாக தவுபால், இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு, காக்சிங் மற்றும் பிஷ்ணுபூர் மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதனிடையே மணிப்பூரில் மியான்மர் நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள தெங்னெவுபால் மாவட்டத்தின் மோரே நகரில் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மோரே நகரில் உள்ள கமாண்டோ படையினரின் முகாம்கள் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில் மோரே நகரில் நேற்று மாநில போலீசாரும், எல்லை பாதுகாப்பு படையினரும் இணைந்து பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.