மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? இன்று தெரியும்

டெல்லி, மே 3- மதுபான கொள்கை வழக்கில் கைதாகி, திகார் ஜெயிலில் உள்ளார் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா.. இவர் ஜாமீன் கேட்டு அப்பீல் செய்துள்ளார்.. இந்த மனு மீது, டெல்லி ஐகோர்ட் இன்று தீர்ப்பு வழங்கபோவதால், மிகுந்த பரபரப்பை தேசிய அளவில் இது ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2021, நவம்பரில் கொண்டு வரப்பட்ட புதிய மதுபான கொள்கையில், ஏகப்பட்ட முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் வெடித்தன.. இதையடுத்து, சிபிஐ, அமலாக்க துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையையும் நடத்தி வருகிறது. அமைச்சர்: இந்த விவகாரத்தில் அமைச்சராக இருந்த, சத்யேந்திர ஜெயின், டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.. இதே விவகாரத்தில்தான், கடந்த மாதம் 21ம் தேதி கைது செய்யப்பட்ட முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் திகார் சிறையில் இருக்கிறார். இந்நிலையில் மணீஷ் சிசோடியா, ஜாமீன் கேட்டு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்திருந்தார்.. அதில், “டெல்லியில் எம்பி தேர்தல் மே 25ம் தேதி நடக்க போவதால், ஆம் ஆத்மி தரப்பின் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.. தேர்தல் வேலைகளையும் பார்க்க வேண்டியிருக்கறது.. அதனால், எனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். சிறப்பு நீதிபதி: இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி காவிரி பவேஜா, “டெல்லி மதுபான கொள்கை தொடர்பான விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் அடுத்தடுத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரப்படுகிறது. அதனால் இப்போதைக்கு மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் தர முடியாது.. வேறு எந்தவிதமான நிவாரணங்களும் தர முடியாது என்று சொல்லி கடந்த 30ம் தேதி மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.
இதையடுத்து, மணீஷ் சிசோடியா தரப்பினர், டெல்லி ஹைகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.. அதில், மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் ஜாமீன் வழங்குவதுடன், இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அமர்வு: மணீஷ் சிசோடியாவின் இந்த மனு மீது இன்று விசாரணைக்கு வரப்போகிறது.. மேல் முறையீட்டு மனு மீது 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று அதாவது மே 3ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. டெல்லியில் தேர்தல் நடக்க உள்ள நிலையில், இன்று மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.