மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி

மதுரை, மே 6
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் நாள்தோறும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 2-ந்தேதி காலை வெகுவிமரிசையாக நடந்தது. தொடர்ந்து 3-ந்தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் தேரோட்டம் நடைபெற்றது. தேர்கள், கீழமாசிவீதி, தெற்குமாசி வீதி, மேலமாசி வீதி, வடக்கு மாசிவீதிகளில் வலம் வந்தன. தேரோட்டத்தை காண மதுரை மட்டுமின்றி தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாசிவீதிகளில் குவிந்திருந்தனர் தேர்கள் நிலைக்கு வந்த பிறகு, அன்றைய தினம் மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் சப்தாவர்ண சப்பரத்தில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். மீனாட்சி அம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரரும் ஒரே சப்பரத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இந்த ஒரு நாளில் மட்டும்தான். எனவே இதை பக்தர்கள் குடும்பம்-குடும்பமாக கண்டு தரிசனம் செய்தனர்.