மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவில் நடந்த ஒடுக்கு பூஜை

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவார்கள். இதனால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் மாசி ெகாடை விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு வழிபாடு, அம்மன் வெள்ளிப்பல்லக்கில் வீதிஉலா வருதல், சமய மாநாடு, யானை மீது சந்தன குடம் பவனி, வில்லிசை, கலை நிகழ்ச்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி தினமும் குமரி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டனர். திருவிழாவில் நிறைவு விழா நேற்று நடந்தது. நேற்று அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது.
3.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடந்தது. 4.30 மணிக்கு அடியந்திர பூஜையும், காலை 6 மணிக்கு குத்தியோட்டமும் நடந்தது.
மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதல், 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, 9 மணிக்கு அத்தாழ பூஜை, இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளல் போன்றவை நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஒடுக்கு பூஜை தொடங்கியது. இதற்காக மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாஸ்தான் கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்கள் 9 மண்பானைகள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டு பூசாரிகள் கோவிலுக்கு பவனியாக கொண்டுவந்தனர்.

அத்துடன் 2 குடம் தேனும் எடுத்து வரப்பட்டது.