மதுபான விடுதியில் 9 பேர் சுட்டுக்கொலை

மெக்சிகோ சிட்டி, நவ.11
மத்திய மெக்சிகோவில் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டனர், 2 பேர் காயமடைந்தனர். அபாசியோ எல் ஆல்டோ நகரில் செயல்பட்டு வரும் ஒரு உள்ள மதுபான விடுதி கடந்த புதன்கிழமை இரவு 9 மணியளவில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று திடீரென புகுந்து, உள்ளே இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் மதுபான விடுதியில் இருந்த ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் கொல்லப்பட்டனர். 2 பெண்கள் காயமடைந்தனர். காயமடைந்த பெண்களின் உடல் நிலை தற்போது சீராக உள்ளது. ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. துப்பாக்கிச் சூடு நடந்த பகுதிக்கு மாநில மற்றும் மத்திய பாதுகாப்பு படை பிரிவுகள் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் கூறினர். மெக்சிகோவின் தொழில்துறை மையமான குவானாஜுவாடோ பகுதியில், சமீபத்திய ஆண்டுகளில் கும்பல் வன்முறை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இரபுவாடோ நகரில் உள்ள மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மெக்சிகோ ஜனாதிபதியாக 2018 இல் பதவியேற்ற ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர், மெக்சிகோவில் தலைவிரித்தாடும் கும்பல் வன்முறையைக் குறைப்பதாக உறுதியளித்திருந்தார். எனினும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.