மதுரை அதிமுக மாநாட்டுக்கு மோடியை அழைக்க ஆலோசனை

மதுரை: ஆகஸ்ட். 5 – மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு பிரதமர் மோடியை அழைப்பது தொடர்பாக பழனிசாமி தரப்பினர் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
மதுரையில் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலாளர்கள் செல்லூர் ராஜு, வி.வி.ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
பழனிசாமிக்கு தென் மாவட்டங்களில் போதிய செல்வாக்கு இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், தங்கள் செல்வாக்கை நிரூபிப்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுவதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் ஆணையம் அதிமுகபொதுச் செயலாளராக பழனிசாமியை அங்கீகரித்துள்ள நிலையில், கூடுதல் உற்சாகத்துடன் மாநாட்டு ஏற்பாடுகளை கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதுமிருந்து மாவட்டத்துக்கு 15 ஆயிரம் பேரை அழைத்து வருமாறு நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த மாநாட்டை முறியடிக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வமும், அமமுகபொதுச் செயலாளர் டிடிவி.தினகரனும் இணைந்து செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்புஓ.பன்னீர்செல்வம் மாநிலம் முழுவதும் தனது ஆதரவாளர்களையும், டிடிவி.தினகரன் ஆதரவாளர்களையும் இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது, கோடநாடு கொலை வழக்கை விரைவில் விசாரித்து, தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். உண்மைக் குற்றவாளிகளுக்கு திமுக அரசு தண்டனை பெற்றுத் தர வேண்டுமென ஓபிஎஸ் வலியுறுத்தினார். இதற்கு பதிலடி கொடுத்த ஆர்.பி.உதயகுமார், “ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் ஊதுகுழலாக இருக்கிறார்” என்றார்.

ஓ.பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் நடத்தியதற்கு முன்புவரை, மாநாட்டில் நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்றன.தற்போது, ஓபிஎஸ், டிடிவி.தினகரன் மற்றும் திமுகவுக்கு தங்களது பலத்தைக் காட்டுவதற்காக, கூட்டணி கட்சித் தலைவர்களை மாநாட்டுக்கு அழைக்கலாமா என்று பழனிசாமி தரப்பினர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.அதேபோல, இந்த மாநாட்டுக்கு பாஜக சார்பில் பிரதமர் மோடியை அழைக்கலாமா என்றும் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, “கூட்டணி கட்சித் தலைவர்களை அழைப்பது தொடர்பாக இதுவரை தகவல் இல்லை. முழுக்க முழுக்க கட்சி மாநாடாகத்தான் இதை நடத்த உள்ளோம். அதனால் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்து வருகிறோம்” என்று கூறினர்.