மதுரை கூட்டத்தில் அமித்ஷா உறுதி

ஹரியானா, ஜூன் 9 மகாராஷ்டிரா, டெல்லியைப்போல 2026 தேர்தலில் தமிழகம், மேற்கு வங்கத்திலும் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மதுரையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராகப்பங்கேற்ற அமித்ஷா பேசியதாவது: தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. 3 ஆண்டுகள் வரலாற்றுப் பெருமையுடைய மதுரை மண்ணின் நாயகரான முத்துராமலிங்கத் தேவரை வணங்குகிறேன். வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டைச் சிறப்பாக நடத்தித்தர வேண்டுகிறேன்.
மதுரை பல்வேறு மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. மதுரை மண் திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழகத்தில் 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். அமித்ஷாவால் திமுகவை தோற்கடிக்க முடியாது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். நீண்டகால அரசியல்அனுபவம் மூலம் மக்களின் நாடித்துடிப்பை அறிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், தமிழக மக்கள் திமுகவை தூக்கி எறியக் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
பகல்ஹாமில் அப்பாவி மக்களை மதத்தின் பெயரால் கொடூரமாக கொலை செய்தவர்களை, முப்படைகளைத் திரட்டி பிரதமர் மோடி அவர்களது ஊருக்குள் புகுந்து அடித்தார். இந்தியாவில் தீவிரவாதிகள் பலமுறை கைவரிசை காட்டியிருக்கிறார்கள். ஆனால், மோடி போன்று வீரதீரச் செயல்களை இதற்கு முன்னர் இருந்த பிரதமர்கள் செய்யவில்லை. மோடி ஆட்சியின் வான்வெளி சாதனைகளை உலக நாடுகள் பாராட்டுகின்றன. பாகிஸ்தான் ஏவுகணைகள், டிரோன் தாக்குதலை இந்தியா வான்வெளியில் தடுத்து நிறுத்தி, தாக்கி அழித்தன. இதன் மூலம் வான்வெளி வல்லமை உலக நாடுகளுக்கு நிரூபணமாக்கப்பட்டது.
2026 தேர்தலில் பாஜக தொண்டர்களின் பணி மிகவும் முக்கியமானது. 2024-ல் ஒடிசாவில் பாஜக முழு பலத்தோடு ஆட்சி அமைத்தது. ஹரியானாவைவிலும் பாஜக 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. 2025-ல் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி அகற்றப்பட்டு, 27 ஆண்டுக்குப்பின் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது. டெல்லியில் பாஜக அமைந்ததுபோல், 2026-ல் தமிழகம், மேற்குவங்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மலரப்போகிறது.