மதுரை மக்களின் மெட்ரோ ரெயில் கனவு நனவாகிறது

மதுரை பிப்ரவரி. 24 –
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய நகரம் மதுரை ஆகும். இது தூங்கா நகரம் என்ற பெருமையை உடையது. 148 கி.மீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த நகரத்தில் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அவர்களின் பெரும்பாலானோர் வீடுகளில் இருசக்கர- நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளனர். எனவே மதுரை மாநகர சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சாலை வசதிகள் இல்லை. எனவே மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு பட்ஜெட் நிதி நிலை அறிக்கையில், மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை தயார் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மெட்ரோ ரெயில் சேவையை விரைந்து கொண்டுவரும் வகையில், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஏதுவாக, தமிழக அரசு இ-டெண்டர் முறையில் ஒப்பந்தப்புள்ளி கோரி உள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் விடுத்துள்ள அந்த ஒப்பந்த புள்ளியின் மதிப்பு ரூ.3 கோடி ஆகும். 120 நாட்களுக்குள் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, மதுரையில் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல், எதிர்கால தேவை, மாற்றுத்திட்டங்கள், திட்டப்பாதை, திருப்பங்கள், பயணிகள் எண்ணிக்கை, பயணத்திட்டம், நேரம், பயணக்கட்டணம், ரெயில் நிலையங்கள், தேவையான நிலப்பரப்பு, எந்த வகை நிதியின் கீழ் மேற்கண்ட திட்டத்தை நிறைவேற்றுவது? ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் மேற்கண்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது.
திருமங்கலம்-ஒத்தக்கடை வரையிலான 31 கி.மீ. தூரத்தில் மெட்ரோ ரெயில் சேவை அமைய உள்ளது. இதில் மொத்தம் 20 நிறுத்தங்கள் அமைகிறது. இரு வழித்தடங்களில் ரெயில் பாதை அமைக்கப்படும். அதன்படி மாட்டுத்தாவணியில் தொடங்கும் ஒரு வழித்தடம் கே.கே.நகர், அண்ணா நகர், தெப்பக்குளம், முனிச்சாலை, கீழவாசல், கீழவெளி வீதி, தெற்குவாசல், பெரியார் நிலையம், அரசரடி, காளவாசல், பாத்திமா கல்லூரி, தபால் தந்தி நகர், பார்க் டவுன் வரை செல்லும். மற்றொரு வழித்தடம் கோரிப்பாளையத்தில் தொடங்கி செல்லூர், மதுரா கல்லூரி, பசுமலை, திருப்பரங்குன்றம், திருநகர், தோப்பூர் (எய்ம்ஸ்), திருமங்கலம் வரை செல்லும்.
மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் உயர்மட்ட இருப்புப் பாதை அமைத்து இதன் வழியாக 3 பெட்டிகளுடன் ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ரெயிலின் குறைந்தபட்ச வேகம் மணிக்கு 25 கி.மீ. அதிகபட்ச வேகம் 60 கி.மீ. என்ற அளவில் இருக்கும். மதுரை மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக சாத்தியக்கூறு அறிக்கை தயாராகி வருகிறது. அதன் பிறகு தான் மதுரையில் மெட்ரோ ரெயிலுக்கு எத்தனை நிறுத்தங்கள் அமையும்? என்பது உறுதி செய்யப்படும். மெட்ரோ ரெயில் திட்டம் பாதுகாப்பானது. நம்பகத்தன்மை மிகுந்தது. சென்னையில் 54 கி.மீ. தூரம் வரை மெட்ரோ ரெயில் இயங்கி வருகிறது. அங்குள்ள ரெயில் நிலையம் மற்றும் ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயிலில் பெயரளவுக்கு மட்டுமே டிரைவர்கள் இருப்பார்கள். பெரும்பாலான நேரங்களில் ஜி.பி.எஸ். மூலமாகவே, ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மதுரையில் மெட்ரோ ரெயில் திட்டம் வந்தால் கூலி வேலை பார்க்கும் சாமானிய மக்கள் முதல் நடுத்தர வர்க்கம் வரை பலருக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். போக்குவரத்து நெரிசலின்றி எளிதாக செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைவாக செல்ல முடியும். மதுரை மாவட்டத்தில் நகர்ப்புறம் மட்டுமின்றி திருமங்கலம், மேலூர், பெருங்குடி, உசிலம்பட்டி ஆகிய புறநகர் பகுதிகளிலும் குடியிருப்புகள் பெருகி வருகின்றன. இங்கு சிறு-குறு தொழில் செய்யும் வணிகர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் தொழில் நிமித்தமாக தினமும் அண்டை மாவட்டங்களுக்கு சென்று வர வேண்டி உள்ளது. எனவே விருதுநகர், சிவகங்கை ஆகிய அண்டை மாவட்டங்களை இணைக்கும் வகையில், தொலைநோக்கு அம்சங்களுடன் சுமார் 50 கி.மீ. சுற்றளவிற்கு மெட்ரோ ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத்தில் தொழில் வளம் பெருகும். இவ்வாறு அவர் கூறினார். மதுரை மக்களின் நீண்ட நாள் கனவான மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்வதோடு விட்டு விடாமல் ஆக்கப்பூர்வமாக உடனடியாக செயல்படுத்தப் பட வேண்டும் என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.