மதுரை மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை: மே 2-
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 10ஆம் நாளான இன்று காலை 8.40 மணிக்கு மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெண்கள் புதிதாக திருமாங்கல்ய சரடு மாற்றி மகிழ்ந்தனர். விழாவை ஒட்டி விரிவாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.23 ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி, அம்மன் மாசி வீதிகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
அதனைத்தொடர்ந்து எட்டாம் நாளான நேற்று முன்தினம் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. அதனையொட்டி நேற்று 9-ம் நாள் திக்குவிஜயத்தை முன்னிட்டு காலையில் மரவர்ணச் சப்பரத்தில் எழுந்தருளினர். மாலையில் இந்திர விமானத்தில் சுவாமி, அம்மன் எழுந்தருளினர்.
பத்தாம் நாளான இன்று (மே 2) மேற்கு வடக்கு ஆடி வீதியிலுள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாணம் காலை 8.40 மணிக்கு நடைபெற்றது.. இதற்காக திருக்கல்யாண மேடையை பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மதுரை மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி உள்ளிட்ட உள்ளூர் ரகப் பூக்களும், பெங்களூரு ரோஸ், வெளிநாட்டிலிருந்து தாய்லாந்து ஆர்க்கிட் மற்றும் பல வண்ண மலர்கள் உள்பட சுமார் 10 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. இவர்களுக்கு உதவி செய்யும் பூக்கள் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் ஈடுபட்டனர்.. வாழைமரத் தோரணங்களும் கோயில் வளாகம் முழுவதும் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளன.