கும்பகோணம் செப்.22-
கும்பகோணத்தில் கூடுதல் போதைக்கு ஆசைப்பட்டு மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சவுந்தரராஜ், பாலகுரு இருவரும் கூலித் தொழிலாளர்கள். கொத்தனார் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. வெவ்வேறு பகுதியைச் சேர்ந்த இருவரும் மேலக்காவிரி பகுதியில் உள்ள காவிரி ஆற்றிற்கு வந்துள்ளனர். இருவரும் மது மற்றும் சானிடைசர் கொண்டு வந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிதுள்ளனர். இருவரும் மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது. இன்று காலை பொதுமக்கள் காவிரி படித்துறை சென்றபோது, இருவரும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, உடல்களை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இருவரும் மது குடித்ததால் இறந்தனரா? மதுவில் சானிடைசர் கலந்து குடித்ததனால் உயிரிழந்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் நான்கு பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களும் சானிடைசர் கலந்து மது அருந்தினர்களா? மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.