மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா உடனடி அமல்

புதுடெல்லி, அக். 10- மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மகளிர் இடஒதுக்கீடு மசோதா உடனடியாக நிறை வேற்றப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உறுதியளித்துள்ளார். காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கட்சியின் முன்னாள் தலைவர்கள், சோனியா காந்தி, ராகுல் காந்தி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா, இமாச்சல பிரதேச மாநிலங்களின் முதல்வர்கள், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவைச் சேர்ந்த உயர்மட்ட கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கார்கே பேசியதாவது: மக்களவை மற்றும் மாநில பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை காங்கிரஸும், எதிர்க்கட்சிகளும் முழு மனதுடன் ஆதரித்தன. பாஜக நினைத்திருந்தால் இந்த மசோதாவை உடனடியாக அமல்படுத்தியிருக்கலாம். ஆனால், பிரதமர் மோடி அதனை செய்யவில்லை. இதிலிருந்து இந்த மசோதா கொண்டுவரப்பட்டதன் நோக்கம் தெளிவாக தெரிகிறது. வெற்று விளம்பரம் மற்றும் வாக்கு வங்கி அரசியலுக்காக மட்டுமே பாஜக இந்த மசோதாவை பயன்படுத்திக் கொண்டுள்ளது.
காங்கிரஸும் மற்ற எதிர்க்கட்சிகளும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை இத்தனை ஆண்டுகளாக தடுத்ததாக பொய்யான குற்றச்சாட்டை பாஜக கூறியதை ஏற்க முடியாது. இந்தியாவில் பெண்களுக்கான அதிகாரத்தை வழங்கியதில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பங்களிப்பினை வழங்கியுள்ளது. 2024-ல் மக் களின் ஆதரவைப் பெற்று காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியமைக்கும் நிலையில், ஓபிசி பெண்களின் அரசியல் பங்களிப்பைநிர்ணயிப்பதோடு, பெண்களுக்கான இடஒதுக்கீட்டையும் உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம். பாஜக அரசின் தோல்விகளை மக்களிடம் எடுத்துக்கூறவும், அக்கட்சியின் தவறான பிரச்சாரங்களை முறியடிக்கவும் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரின் மக்கள் தொகைக்கு ஏற்ப சமவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. சமூக நீதி மற்றும் உரிமைகளை நிலைநாட்ட நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதே காங்கிரஸின் கொள்கை. அந்த வகையில், மத்தியிலும்,மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.