மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

புதுடெல்லி, டிச. 23-மழை, வெள்ளத்தால் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டபோது முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் இண்டியா கூட்டணி கூட்டத்தில் இருந்தார். ‘வெள்ளம் காரணமாக என்னால் கூட்டத்துக்கு வரமுடியாது. என் மண், மக்கள் எனக்கு முக்கியம்’ என்று, அந்த கூட்டத்தை தள்ளிவிட்டு அவர் தமிழகத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு அவருக்கும் முன்பாகவே உதவிக்கரம் நீட்டிவிட்டது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக டெல்லியில் தமிழக செய்தியாளர்களிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பேசினார். அவர்களது கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அவர் கூறியதாவது: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசியில் 50 செ.மீ. அளவுக்கு மழை பெய்வது குறித்த தகவல் எங்களுக்கு 18-ம் தேதி காலையில் கிடைத்தது. இதுபற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் உடனே தெரிவித்தேன்.
விரைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறு தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எஃப்), ராணுவம் உள்ளிட்ட துறைகளுக்கு அவர் என் முன்னிலையிலேயே உத்தரவிட்டார். டிசம்பர் 18 முதல் 21-ம் தேதி மாலை வரையிலான மீட்பு பணியில் 42,290 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் மத்திய அரசின் அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டன. குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிய சுமார் 800 பயணிகளை மீட்க ரயில்வே சார்பில் சிறப்பு பேருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன. மீட்பு பணிக்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. உள்துறை அமைச்சகம் சார்பில் 2 கட்டுப்பாடு அறைகள் 24 மணி நேரமும் தொடர்ந்து நிலைமையை கண்காணித்தன. இதனால், உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இப்பணியில்,
விமானப் படை (5), கடற்படை (3), கடலோர காவல் படை (1) ஆகியவற்றின் 9 ஹெலிகாப்டர்கள் டிசம்பர் 21-ம் தேதி வரை 70 முறை பறந்து மீட்பு பணியில் ஈடுபட்டன. வழக்கமாக, வெள்ள நிலைமை ஓரளவு சீரான பிறகே மீட்பு பணி தொடங்கப்படும். மத்திய குழுவும் பார்வையிடச் செல்லும். ஆனால், 4 தென் மாவட்டங்களிலும் மத்தியகுழுவினர் 19-ம் தேதி மாலைக்குள்ளாகவே நேரடியாக களம் இறங்கிவிட்டனர். வெள்ளம் வடியும் வரைகாத்திருக்காமல் மீட்பு பணியும் உடனடியாக தொடங்கியது.