மத்திய அரசின் முயற்சிகளுக்குபினராயி விஜயன் பாராட்டு

கொச்சி, ஜூன் 15- குவைத் தீ விபத்தில் இறந்த 45 இந்தியர்கள் உடல்கள் இந்திய விமானப் படை விமானம் மூலம் நேற்று காலை கொச்சி வந்து சேர்ந்தன. இவற்றில் கேரளா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 31 பேரின் உடல்கள் அந்தந்த மாநில அரசுகளின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தெற்கு குவைத்தின் மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள். இந்த குடியிருப்பில் கடந்த புதன்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்தது. இந்த கொடூர சம்பவத்தில் மூச்சுத் திணறியும் உடல் கருகியும் 149 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயம் அடைந்த 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இறந்தவர்களில் 45 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 23 பேர் கேரளாவையும் 7 பேர் தமிழகத்தையும் சேர்ந்தவர்கள். ஆந்திரா மற்றும் உ.பி.யிலிருந்து தலா 3 பேர், ஒடிசாவில் இருந்து இருவர், பிஹார், பஞ்சாப், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மற்றும் ஹரியாணாவில் இருந்து தலா ஒருவரும்உயிரிழந்துள்ளனர். சிலரது உடல்கள் அடையாளம் காணமுடியாத அளவுக்கு கருகியிருந்தன. இந்நிலையில், 45 இந்தியர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மூவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குவைத் அதிகாரிகள் அறிவித்தனர். டிஎன்ஏ பரிசோதனைக்கு பிறகு 45 இந்தியர்களின் உடல்களை குவைத் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதற்கிடையில், நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் குவைத் சென்றிருந்தார். இந்திய விமானப் படையின் சி-130ஜே ரகவிமானம் குவைத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இந்தவிமானத்தில் 45 இந்தியர்களின் உடல்களுடன் அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேற்று காலை 10.25 மணிக்கு கொச்சி வந்து சேர்ந்தார். இறந்தவர்களின் உடல்கள் கொச்சி மற்றும் டெல்லியில் அந்தந்த மாநில அரசுகளின் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படும் என தூதரக அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.இதன்படி கேரளாவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர் மற்றும் கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் என 31 பேரின் உடல்கள் கொச்சியில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. எஞ்சிய 14 பேரின் உடல்களுடன் ஐஏஎப் விமானம் டெல்லி புறப்பட்டுச் சென்றது. இதற்கிடையில், தீவிபத்தில் காயமடைந்த 33 இந்தியர்கள் குவைத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் பற்றிய தகவல்களுக்கு குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம் 965-65505246 (வாட்ஸ்-அப் மற்றும் வழக்கமான அழைப்புகள்) என்ற எண்ணை அறிவித்துள்ளது. மின்சாரக் கசிவே தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இது தொடர்பாக கட்டிட உரிமையாளரை குவைத் அரசு கைது செய்தது. பிறகு குவைத்தை சேர்ந்த ஒருவர் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசுக்கு பினராயி விஜயன் பாராட்டு: குவைத் தீ விபத்து சம்பவத்தில் மத்திய அரசு மற்றும் குவைத் அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்தார்.குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்கள் ஐஏஎப் விமானம் நேற்று கொச்சி வந்து சேர்ந்தன. இவற்றில் 31 பேரின் உடல்களை கேரள முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள் வீணா ஜார்ஜ், ரோஸி அகஸ்டின் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.