மத்திய அரசுடன் பகைமை பாராட்ட மாட்டேன்: விவாதத்தை கிளப்பிய முதல்வரின் கருத்து

ஹைதராபாத். மார்ச் 8- தெலங்கானா மக்களின் நலனுக்காக மத்திய அரசுடனோ, பிரதமருடனோ பகைமை பாராட்ட மாட்டேன். தேவைப்பட்டால் ஒரு படி கீழே இறங்கவும் தயாராக இருக்கிறேன் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்த கருத்து பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஹைதராபாத் – ராமகுண்டம் இடையே ராஜீவ் நெடுஞ்சாலையில் ஆல்வால் அருகே நேற்று ஹெலிபேட் நடைபாதைக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அடிக்கல் நாட்டினார். அப்போது அவர் பேசியதாவது: ஹைதராபாத் நகருக்கு சர்வதேச அளவில் ஒரு அடையாளத்தை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில்தான். நெக்லஸ் ரோடு, மெட்ரோ திட்டம், நகர வெளிவட்ட சாலை, ஐ.டி. தொழில்நுட்பம் போன்றவற்றை ஹைதராபாத் நகருக்கு கொண்டு வந்தது காங்கிரஸ் அரசுதான். இதுபோன்ற ஒரு திட்டத்தைக் கூட கடந்த 10 ஆண்டுகளில் பிஆர்எஸ் அரசு செய்யவில்லை. ஆனால், நம் நாட்டின் பிரதமர் ஹைதராபாத் அல்லது தெலங்கானாவில் எங்காவது சுற்றுப்பயணம் மேற்கொண்டால் ஒரு முதல்வராக சென்று நான் வரவேற்றதையும், அவரிடம் மாநிலத்திற்கு தேவையான வளர்ச்சிப் பணிகள் குறித்தும், மத்திய அரசின் நிதி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதை எதிர்க்கட்சிகள் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கின்றன. நம் மாநிலத்துக்கு ஒரு விருந்தாளி வந்தால் அவரை வரவேற்பது தானே முறை. அதைத்தான் நான் செய்தேன். அதுவும் நம் நாட்டின் பிரதமர் வந்தால் அவரை வரவேற்பதும் நமது கடமைதான். அந்த சமயத்தில் மாநில மக்களின் நலனுக்காகவும், மாநில வளர்ச்சிக்காகவும் சில கோரிக்கைகளை முன் வைத்தேன். அதனை செய்து தருவதாக பிரதமரும் வாக்குறுதி தந்தார். அதனை நான் நம்புகிறேன். அவர் ஒருவேளை செய்து தராவிட்டால் பிரதமர் இங்கு வரும்போது போராட்டம் நடத்தவும் நான் தயங்க மாட்டேன். இவ்வாறு அவர் பேசினார். முதல்வர் ரேவந்த் ரெட்டியின் இந்தக் கருத்து தற்போது புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.