மத்திய அரசை வலியுறுத்த மணிப்பூர் பிஜேபி எம்எல்ஏக்கள் முடிவு

இம்பால், செப்டம்பர் 13- வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்க மத்திய அரசிடம் மனு அளிக்க ஆளும் பாஜகவின் 23 எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.
மணிப்பூரின் பிஜேபி தலைமையிலான அரசின் 23 எம்எல்ஏக்கள் மாநிலத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதாக உறுதியளித்து தீர்மானத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
கடந்த மாதம் மே மாதம் முதல் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், எல்லையை பராமரிக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவும் 23 எம்எல்ஏக்கள் விரைவில் டெல்லி செல்ல உள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. கையொப்பமிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மணிப்பூர் மாநிலத்தின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக ஒன்றுபட்டு நிற்கிறோம் என்றும் தனி நிர்வாகத்தை விரும்பவில்லை என்றும் ஒருமனதாக கையெழுத்திட்டு உள்ளனர்.
23 எம்எல்ஏக்களில், 18 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் மற்றும் 5 பேர் கூட்டணிக் கட்சிகளான சட்டமன்ற சபாநாயகர் டோக்சோம் சத்யபிரதா சிங், அமைச்சர்கள் ஒய் கேம்சந்த் மற்றும் பிஷ்வஜித் சிங் ஆவர். பாஜகவைச் சேர்ந்த 7 பேர் உட்பட 10 பழங்குடியின எம்எல்ஏக்களும், உள்ளூர் பழங்குடியினர் தலைவர்கள் மன்றம், குகி இன்பி மணிப்பூர் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின அமைப்புகளும் மே 12ஆம் தேதி முதல் பழங்குடியினருக்கு சம மாநில அந்தஸ்து வழங்கக் கோரி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.