மத்திய பாஜக அரசின் நெல் கொள்முதல் விலை- பாமக அதிருப்தி

டெல்லி, ஜூன் 20- மத்திய பாஜக அரசின் ல் கொள்முதல் விலை அறிவிப்பு போதுமானது அல்ல என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சியான பாமக அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் நெல் குவிண்டாலுக்கு தமிழக அரசுதான் ரூ800 கூடுதல் ஊக்கத் தொகையாக வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: 2024-25ஆம் ஆண்டில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.117 உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன் மூலம் சாதாரண ரக நெல்லுக்கான கொள்முதல் விலை 2,183 ரூபாயிலிருந்து 2300 ரூபாயாகவும், சன்ன ரக நெல்லுக்கான கொள்முதல் விலை 2,203 ரூபாயிலிருந்து ரூ.2320 ஆகவும் உயர்ந்திருக்கிறது. இது கணிசமான உயர்வு தான் என்றாலும் கூட வேளாண் உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும் போது இது போதுமானது அல்ல. ஒரு குவிண்டால் நெல்லுக்கான உற்பத்திச் செலவு ரூ. 2017 ஆக மதிப்பிடப்பட்டிருக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி 50% லாபமாக ரூ.1009 சேர்த்து ஒரு குவிண்டாலுக்கான கொள்முதல் விலையாக ரூ.3026 நிர்ணயிக்கப்பட்டிருந்தால் உழவர்கள் ஓரளவாவது மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். ஆனால், வேளாண் விளைபொருட்களுக்கான உற்பத்தி செலவுகளை கணக்கிடுவதற்காக மத்திய அரசு கடைபிடிக்கும் வழிமுறையில் உள்ள குளறுபடிகள் காரணமாக நெல்லுக்கான உற்பத்திச் செலவு குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. அதனால் கொள்முதல் விலையும் குறைகிறது. இது தான் உழவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் நெல் கொள்முதல் விலை போதுமான அளவில் இல்லை எனும் போது, அதை ஈடு செய்யும் வகையில் தமிழக அரசு தான் கூடுதல் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஆனால், தமிழக அரசோ எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத வகையில் சாதாரண நெல்லுக்கு, 82 ரூபாய், சன்ன ரக நெல்லுக்கு, 107 ரூபாயை கடந்த ஆண்டுக்கான ஊக்கத்தொகையாக தமிழக அரசு அறிவித்தது. நடப்பாண்டிலும் இதே அளவில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2500-க்கூட தாண்டாது. இது உழவர்களுக்கு போதுமானதாக இருக்காது.