மத்திய பாதுகாப்பு படை குவிப்பு

மதுரை: டிசம்பர் 2: திண்டுக்கல்லில் லஞ்சப் பணத்துடன் அமலாக்கத் துறை அதிகாரி பிடிபட்ட விவகாரம் தொடர்பாக, மதுரையில் உள்ள அமலாக்கத் துறை மண்டல உதவி அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மத்திய பாதுகாப்புப் படையினரும் அங்கு குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் அரசு மருத்துவர்சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கியஅமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து, அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி பணியாற்றும் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாகத் துறையின் உதவி மண்டல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனைமேற்கொண்டனர்.
சோதனைக்கு அனுமதி மறுப்பு: இதையொட்டி, மதுரை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில், ஆய்வாளர்கள் ரமேஷ், குமரகுரு, சூரியகலா, பாரதிபிரியா அடங்கிய 20-க்கும் மேற்பட்ட குழுவினர் நேற்று சோதனைக்குச் சென்றனர்.

அப்போது அங்கிருந்த அமலாக்கத் துறை அதிகாரிகள், லஞ்ச ஒழிப்புப் போலீஸாரை உள்ளே அனுமதிக்க மறுத்து, தடுத்து நிறுத்தினர். “எதற்காக சோதனை நடத்த வந்துள்ளீர்கள்?” என்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் சிலர், போலீஸாரிடம் கேள்வி எழுப்பினர்.
அப்போது, “திண்டுக்கல்லில் அமலாக்கத் துறை அதிகாரி அன்கித் திவாரி லஞ்சப் பணத்துடன் சிக்கியுள்ளதால், இங்கு சோதனை நடத்த வந்துள்ளோம்” என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.