மனைவியுடன்சிசோடியா சந்திப்பு

புதுடெல்லி,நவ.12- உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வரும் மனைவியை, டெல்லி மாநில முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா நேற்று சந்தித்துப் பேசினார்.
டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் மீதான வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் மணிஷ் சிசோடியாவின் மனைவி சீமா அவதிப்பட்டு வருகிறார். அவர் பல மாதங்களாக தொடர்ந்து சிகிச்சையில் இருக்கிறார். இதனிடையே தனது மனைவியைக் காண நீதிமன்றம் அனுமதி தரவேண்டும் என்று மணிஷ் சிசோடியா மனு தாக்கல் செய்திருந்தார்.
இதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து நேற்று காலை 10 மணிக்கு டெல்லி திஹார் சிறையில் இருந்து சிறைச்சாலை வாகனத்தில் புறப்பட்ட சிசோடியா, அவரது வீட்டுக்கு வந்து மனைவியைச் சந்தித்துப் பேசினார்.
நீதிமன்றம் உத்தரவு: மனைவியுடன் அவர் தங்கியிருக்க நீதிமன்றம் 6 மணி நேரம் அனுமதி வழங்கியிருந்தது.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்த மணிஷ் மனைவியைப் பார்த்து விட்டு மாலை 4 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு சிறைக்கு வந்தடைந்தார். இந்த 6 மணி நேரத்தில் ஊடகங்களைச்
சந்தித்துப் பேசவோ, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவோ கூடாது என்று அவருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.