மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மகனைக் கொன்ற தந்தை

Oplus_131072

பெங்களூரு, ஜூன் 6: தெற்கு பெங்களூரு ஜே.பி.நகரின் ஜரகனஹள்ளியில் புதன்கிழமை பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட சண்டையில் தலையிட்ட அவர்களது 23 வயது மகன் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக‌ கைதான பசவராஜுவின் (53), ஒரே மகன் யஷ்வந்த் பி (23), சர்ஜாபுரா மெயின் ரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். பசவராஜு மினி சரக்கு வாகன டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
முதற்கட்ட விசாரணையில், பசவராஜுவுக்கும் மனைவி பாக்யலட்சுமிக்கும் இடையே 75 வயதான பசவராஜுவின் படுத்த படுக்கையான தாயைக் கவனிப்பது மற்றும் இதர அற்ப விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்தது. இது தொடர்பாக அடிக்கடி தகராறு செய்து வந்தனர்.
புதன்கிழமை பசவராஜுவின் இளைய மகள் பவித்ராவின் பிறந்தநாள். முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு மாணவியான பவித்ரா, தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். பசவராஜு தனது தாயுடன் செல்ஃபி எடுத்து வெளிநாட்டில் பணிபுரியும் தனது தம்பிக்கு புகைப்படங்களை அனுப்பச் சொன்னார்.இது தொடர்பாக‌ பாக்யலட்சுமி கணவர் பசவராஜுடன் தகராறில் ஈடுபட்டார்.
சண்டையின் போது, ​​மனைவியிடம் தொடர்ந்து தகராறு செய்தால் கொன்று விடுவேன் என எச்சரித்துள்ளார். அதன் பிறகு அவரது மனைவி சவால் விட்டதால், பசவராஜ் சமையலறையில் இருந்த கத்தியைக் கொண்டு மனைவியை நோக்கிச் சென்றுள்ளார்.அப்போது வேலைக்குச் செல்லத் தயாராக இருந்த அவர்களது மகன் யஷ்வந்த், தலையிட்டு, பசவராஜுவைத் தன் தாயிடம் இருந்து தள்ளிவிட்டு, குடும்பத்தை பொருளாதார ரீதியாகப் பார்த்துக் கொள்வதாகக் கூறி, அற்ப விஷயங்களுக்குச் சண்டையிடுவதை நிறுத்தச் சொன்னார். தள்ளிவிட்டதால் ஆத்திரமடைந்த பசவராஜ், யஷ்வந்தின் மார்பில் கத்தியால் குத்தி உள்ளார். உடனே யஷ்வந்துக்கு ரத்தம் கொட்டியது. தம்பதியினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்,
அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த உட‌ன் போலீசார் மருத்துவமனைக்கு விரைந்து, பசவராஜைக் கைது செய்துள்ளனர்.
பின்னர் வீட்டிற்கு சென்று அங்கிருந்த‌ கத்தியை மீட்டனர். பசவராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்