மன்னிப்பு கேட்கிறேன் சித்தார்த் – பிரகாஷ் ராஜ்

சென்னை செப்.29- நடிகர் சித்தார்த்தின் திரைப்பட விழாவில் கன்னட அமைப்பினர் கோஷங்கள் எழுப்பிய நிலையில் அந்தச் சம்பவத்துக்காக அனைத்து கன்னடர்கள் சார்பிலும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவைப் பூர்வீமாகக் கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழில் பல காலமாக கோலோச்சிய நடிகராக இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி என அவர் தடம் பதித்த களங்கள் பல. சினிமாவில் பிரபலமான பிரகாஷ்ராஜ் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் #justasking என்ற ஹேஷ்டேகின் கீழ் அரசியல் கருத்துகளைப் பதிவிடுவது வழக்கம்.
இந்நிலையில், எக்ஸ் தளத்தில் கருத்திட்ட அவர், “ஆம் அவை எங்களுடைய அரசியல் கட்சிகள் தான். பல ஆண்டுகளாக பிரச்சினையைத் தீர்க்க முடியாத கட்சிகள். அதற்குக் காரணமான தலைவர்களைக் கேள்வி கேட்காமல், இவ்விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத எம்.பி.க்களைக் கேள்வி கேட்காமல், சாமான்ய மக்களை கொடுமைப்படுத்துவதும், கலைஞர்களை இம்சிப்பதும் தவறு. அனைத்து அன்பான கன்னடிகர்கள் சார்பிலும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
கர்நாடகாவில் நடந்தது என்ன? முன்னதாக, பெங்களூருவில் ‘சித்தா’ படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென அரங்குக்குள் நுழைந்த கன்னட அமைப்பினர் தகராறில் ஈடுபட்டு, சித்தார்த் முன்பு சூழ்ந்துகொண்டு முழக்கம் எழுப்பினர். அப்போது அவர்கள், “காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பந்த் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இதெல்லாம் தேவையா? உடனே பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்துங்கள்” என்று எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நன்றி தெரிவித்துக்கொண்டு நடிகர் சித்தார்த் மேடையிலிருந்து இறங்கிச் சென்றார்.
நடிகர் சித்தார்த் தனது இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்து நடித்துள்ள படம் ‘சித்தா’. இதை ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ளார். சித்தார்த்துக்கும் அவர் அண்ணன் மகளுக்குமான பாசப் பிணைப்பு தான் கதை. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டிருந்தார். படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.