மம்தா பானர்ஜி டிசம்பர் 5ம் தேதி டெல்லி பயணம்

கொல்கத்தா, நவ. 25- இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட 20 வளரும் மற்றும் வளர்ந்த நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆலோசனைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. இந்நிலையில், அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ம் தேதி மாநில முதல் மந்திரிகள் கூட்டத்தை பிரதமர் மோடி நடத்துகிறார். இதில் பங்கேற்பதை மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக, மம்தா பானர்ஜி கூறுகையில், பிரதமர் மோடியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க 5-ம் தேதி டெல்லி செல்கிறேன். மேற்கு வங்காள முதல் மந்திரியாக அல்லாமல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவராக பங்கேற்பேன் என தெரிவித்தார். இந்தக் கூட்டத்துக்கு இடையே பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசுவார் என மாநில அரசு வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்தது.