மம்தா பானர்ஜி மீது பா.ஜனதா தலைவர் தாக்கு

கொல்கத்தா, ஆக. 22- எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பிரதமர் மோடியை வீழ்த்த திட்டமிட்டுள்ளன. இதற்காக I.N.D.I.A. கூட்டணியை உருவாக்கியுள்ளன. எதிர்க்கட்சிகளின் 3-வது கூட்டம் மும்பையில் நடைபெற இருக்கிறது. மோடியை எதிர்க்கும் முக்கியமான தலைவர்களில் ஒருவராக மம்தா பானர்ஜி உள்ளார். இன்னும் ஆறு மாதத்திற்குதான் மோடி பிரதமர் பதவியில் இருப்பார். அதன்பின் மக்களால் தோற்கடிக்கப்படுவார் என மம்தா பானர்ஜி தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில் மேற்கு வங்காள மாநில பா.ஜனதா தலைவர் சுகந்தா முஜும்தார், I.N.D.I.A. கூட்டணியில் நீங்கள் உள்ளீர்கள், ஆனால், இந்தியா உங்களுடன் இல்லை எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுகந்தா மஜும்தார் கூறுகையில் ‘’நீங்கள் (மம்தா பானர்ஜி) I.N.D.I.A. கூட்டணியில் உள்ளீர்கள். ஆனால், இந்தியா உங்களோடு இல்லை. இந்தியா மோடியுடன் உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். அதை மம்தா பானர்ஜியால் தடுத்து நிறுத்த இயலாது. உங்களுடைய ஊழல் பற்றி மேற்கு வங்காள மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். நேரம் வரும்போது அவர்கள் உங்களை அதிகாரத்தில் இருந்து வெளியேற்றுவார்கள்’’ என்றார். முன்னதாக, இமாம்களுடன் நடந்த கூட்டத்தின்போது, மதம் அரசியலுடன் ஒருபோதும் கலக்கக் கூடாது. பா.ஜனதா தன்னைப் பற்றி என்னக் கூறினாலும் பரவாயில்லை. ஆனால், யாருடன் மதம் தொடர்பான மோதல் கிடையாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்’’ என்றார்.