மம்தா மீது பாஜக குற்றச்சாட்டு

கொல்கத்தா: ஏப்ரல் 18 மேற்கு வங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் புதன்கிழமை (ஏப்.17) ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரம் ஏற்பட்டதில் 4 பேர் காயமடைந்தனர். முர்ஷிதாபாத்தின் சக்திபூர் பகுதியில் ராம் நவமி உத்சவ் உஜ்ஜபன் கமிட்டி நடத்திய ஊர்வலத்தின் மீது சிலர் வீட்டின் மாடிகளில் இருந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னதாக, கல்வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்த கும்பலைக் கலைக்க போலீஸார் தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த கலவரத்தை வைத்து மம்தா அரசை கடுமையாக சாடியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் சுவேந்து அதிகாரி. அவர் தனது எக்ஸ் தளத்தில், “அமைதியாக நடந்த ராம நவமி ஊர்வலம் மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. பேரணி மீது கற்கள் வீசப்பட்டது. கடைகள் சேதப்படுத்தப்பட்டன. மம்தா அரசின் காவல்துறையும் குற்றவாளிகளுடன் சேர்ந்துகொண்டு ஊர்வலத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற நோக்குடன் ராம பக்தர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியது.
ராம நவமி ஊர்வலத்தில் மோதல் ஏற்பட்டதற்கு மம்தா பானர்ஜியே காரணம். அவரின் ஆத்திரமூட்டும் பேச்சின் காரணமாகவே மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ராம நவமி ஊர்வலங்கள் சீர்குலைக்கப்பட்டன. ராம நவமி நடக்கும் அது முன்பாகவே கலவரத்துக்கான நாள் என்று மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். ராம பக்தர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை நடத்த வேண்டும். இதுதொடர்பாக மேற்கு வங்க ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.