மம்முட்டி படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் மறைவு

கொச்சி, கேரளாவில் பிரபல இயக்குநராக அறியப்படுபவர் கே.ஜி. ஜார்ஜ் (வயது 77). கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதித்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், காக்கநாடுவில் உள்ள முதியோர் காப்பகத்தில் தங்கி பராமரிக்கப்பட்டு வந்த அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இந்நிலையில், அவர் நேற்று காலமானார்.
அவருடைய இறுதி சடங்குகள் நாளை நடைபெறும் என முதியோர் காப்பக அதிகாரிகள் தெரிவித்தனர். அவருக்கு செல்மா ஜார்ஜ் என்ற மனைவியும், தாரா என்ற மகளும், அருண் என்ற மகளும் உள்ளனர். 20 தசாப்தங்களில் 19 படங்களை இயக்கிய அவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு கேரள அரசு, ஜே.சி. டேனியல் விருது வழங்கி கவுரவித்தது. இது மலையாள திரையுலகின் உயர்ந்த விருது ஆகும். இவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.
அவற்றில் மேளா (1980), யவனிகா (1982) உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை அதிகம் சென்றடைந்தது. அடமின்டே வாரியெல்லு (1983), பஞ்சவதி பாலம் (1984), மத்தோரல் (1988) உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். அவரது மறைவுக்கு நடிகர்கள் மம்முட்டி, பிருத்விராஜ், ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர். இதேபோன்று முதல்-மந்திரி பினராயி விஜயனும் இரங்கல் தெரிவித்து உள்ளார். சமூக பொறுப்புள்ள விசயங்களை கொண்டு படங்களை எடுத்து, பார்வையாளர்களின் மனங்களில் இடம் பிடித்தவர். சமூக கட்டமைப்பு மற்றும் தனிப்பட்ட நபரின் எண்ணங்களை பற்றிய கட்டமைப்பு ஆகியவற்றை அலசி ஆய்வு செய்ய கூடிய தனித்தன்மை கொண்டவர். பல நினைவுகூரத்தக்க படங்களின் இயக்குநர் அவர் என தெரிவித்து உள்ளார்.