மயங்கி விழுந்த மாணவர்கள்

புதுடெல்லி: மே 30: தலைநகர் டெல்லியில் உள்ள முங்கேஷ்புர் பகுதியில் நேற்று மதியம் 2.30 மணிக்கு உச்சபட்சமாக 126.14 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. நாட்டிலேயே உச்சபட்ச வெப்பஅலை டெல்லியில் வீசி வருவதாக வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக வெப்பநிலை பதிவானதால், கருவியில் கோளாறு ஏற்பட்டதா என்று ஆய்வு நடத்தி வருவதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிஹாரில் 107.6 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பத்துடன் கூடிய அனல் காற்று வீசியது. சில பகுதிகளில் ஆங்காங்கே பள்ளி மாணவர்கள் சுருண்டு, மயங்கி விழுந்தனர். பிறகு மருத்துவமனைகளில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ராஜஸ்தானில் 123.8 டிகிரி ஃபாரன்ஹீட், ஹரியாணாவில் 122.54 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்று உத்தர பிரதேசத் தில் உச்சபட்ச வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம், மதுரை விமான நிலையம், திருத்தணியில் 104, பரங்கிப்பேட்டையில் 103, புதுச்சேரி, மதுரையில் 102, கடலூர், ஈரோடு, நாகை, வேலூரில் 101, தஞ்சை, திருச்சி, தூத்துக்குடியில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் என 14 நகரங்களில் வெப்பநிலை சதம் அடித்தது.