மரத்தில் தூக்கிட்டு காதலர்கள் தற்கொலை

கத‌க், ஏப். 13: காதலர்கள் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கஜேந்திரகடா தாலுகா நரேகல் நகரில் நடந்துள்ளது.
நரேகல் நகரைச் சேர்ந்த அப்பண்ணா கோரக்கி (28), லலிதா ஹலகேரி (21) ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்.அதே ஊரைச் சேர்ந்த அப்பண்ணா கோரக்கிக்கும் லலிதாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களின் ஆழ்ந்த காதலுக்கு குடும்பத்தினர் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 4ம் தேதி லலிதாவுக்கு, அவரது குடும்பத்தினர் வற்புறுத்தி வேறு ஒரு இளைஞருடன் திருமணம் நடத்தி வைத்தனர்.இதனால் அப்பண்ணாவும், லலிதாவும் மனமுடைந்தனர். காதலருடன் பல நூறு கனவுகள் கண்ட லலிதாவால் அவரை மறக்க முடியவில்லை. வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டாலும் அவர் மனம் முழுவதும் அப்பாண்ணாவுடன் கலந்திருந்தது. ஒருவரையொருவர் பிரிய முடியாமல், அப்பண்ணாவும், லலிதாவும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.