மராட்டிய சிறுமிகள் குஜராத், ராஜஸ்தானுக்கு விற்பனை- பட்னாவிஸ் பகீர் தகவல்

மும்பை, மார்ச். 11 –
குழந்தை திருமணத்திற்காக சிறுமிகள் மராட்டியத்தில் இருந்து குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். 24 வழக்குகள் பதிவு குழந்தைகள் திருமணம், பெண்கள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பாக மேல்-சபையில் மகாதேவ் ஜன்கர் எம்.எல்.சி. கேள்வி எழுப்பி இருந்தார். அவரின் கேள்விக்கு துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த ஜனவரி மாதம் மட்டும் திருமணத்துக்காக பெண்கள், சிறுமிகள் கடத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக 24 வழக்குகள் பதிவாகி உள்ளது. 2021-ம் ஆண்டு இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக 448 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிமாநிலத்துக்கு விற்பனை ஏழை பெண்கள் மற்றும் குழந்தை திருமணத்துக்காக சிறுமிகள் மராட்டியத்தில் இருந்து ராஜஸ்தான், குஜராத் மாநிலத்துக்கு கடத்தப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. நமது நாட்டில் 18 வயதுக்குட்பட்ட பெண்கள், வயது வந்த ஆணை திருமணம் செய்வது குழந்தை திருமணமாக கருதப்படுகிறது. குழந்தை திருமணம் நமது நாட்டில் குற்றமாகும்.