மருத்துவ அறிக்கையில் தகவல்

பனாஜி: பிப்.14- 4 வயது மகனை கொலை செய்த விவகாரத்தில் மருத்துவப் பரிசோதனை செய்ததில் பெங்களூருவைச் சேர்ந்த சுசானா சேத்துக்கு எந்தவிதமான மனநோயும் இல்லை என்று தெரியவந்துள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் சுசானா சேத். இவரது கணவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் சுசானாவிடமிருந்து பிரிந்து இந்தோனேசியாவில் வசித்து வருகிறார். சுசானா தனது மகனுடன் பெங்களூருவில் வசித்து வந்தார். பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஏஐ ஆய்வுக்கூட நிறுவனத் தலைமை நிர்வாகியாகவும் இருந்து வருகிறார் சுசானா சேத். இந்நிலையில், கோவாவில் ஒரு ஓட்டலில் தனது 4 வயது மகனை கொன்று சூட்கேசில் எடுத்து சென்ற சுசானா சேத் போலீஸாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
சுசானா சேத் தனது மகனுக்கு அதிக அளவில் இருமல் டானிக்கொடுத்தது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சுசானா சேத்துக்கு கோவாவில் மனநலம் தொடர்பான ஆய்வும், பரிசோதனையும் செய்யப்பட்டது.அதன்படி அவருக்கு எந்தவிதமான மனநோயும் இல்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
சுசானா சேத், தனது குழந்தையை கொலை செய்தது தொடர்பான வழக்கு கோவாவில் நடைபெற்று வருகிறது. இந்த நீதிமன்றத்தில் சுசானாவின் தந்தை ஒரு மனுவை கடந்த மாதம் தாக்கல் செய்திருந்தார். சுசானாவுக்கு மனநோய் இருக்கலாம் என்றும் அதுதொடர்பாக ஆய்வு செய்து மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவ ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கு கோவா பனாஜியிலுள்ள குழந்தைகள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது கோவா போலீஸார், நீதிமன்றத்தில் ஒரு மருத்துவ அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.