மருந்துகள் உற்பத்தியை மத்திய அரசே ஒழுங்குபடுத்தும்

புதுடெல்லி, மார்ச்13- நமது நாட்டில் தற்போது மருந்துகள் மற்றும் அழகு சாதனப்பொருட்கள் உற்பத்தியை ஒழுங்குபடுத்துகிற அதிகாரத்தை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் கொண்டுள்ளன. இந்த அதிகாரத்தை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் வகையில் புதிய சட்ட மசோதா தயாராகி இருக்கிறது. அதே நேரத்தில் மருந்துகள், அழகு சாதனப்பொருட்கள், மருத்துவ சாதனங்கள் விற்பனையை மாநில அரசுகளே ஒழுங்குபடுத்தும். இதற்காக ‘புதிய மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் அழகுசாதனப்பொருட்கள் மசோதா, 2023’ தயாராகி லிட்டது.
இந்த மசோதா தற்போது நடைமுறையில் இருந்து வருகிற ‘மருந்துகள், அழகு சாதனப்பொருட்கள் சட்டம் 1940’-க்கு மாற்றாக வருகிறது. இந்த மசோதா கடந்த ஆண்டு ஜூலை மாதம் பொதுவெளியில் விடப்பட்டு, தொடர்புடைய அனைவரின் கருத்துகளும் கோரப்பட்டுள்ளன. இது தொடர்பாக மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஎஸ்சிஓ) மற்றும் மத்திய சுகாதார அமைச்சகம் பல்வேறு கருத்துகளை தொடர்புடையவர்களிடம் இருந்து பெற்றுள்ளன. தற்போது இது அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனையில் உள்ளது. இந்த மசோதாவானது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டு சட்டமாகி விட்டால், மருந்துகள் மற்றும் அழகுசாதனப்பொருட்கள் உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் அனைத்து அதிகாரங்களும் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஎஸ்சிஓ) மூலம் மத்திய அரசுக்கு போய்விடும். புதிய சட்டமசோதாவில், மருந்துகள், அழகுசாதன பொருட்கள் இறக்குமதி தொடர்பான குற்றங்களுக்கு அபராதம் உயர்த்தப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது.