மர்ம விலங்கு – தொடரும் மர்மம்

புதுடெல்லி: ஜூன் 11 மத்திய அமைச்சரவை பதவியேற் பின்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் மர்ம விலங்கு நடந்து செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நேற்று முன்தினம் குடியரசுத் தலைவர்கள் மாளிகையில் மிக விமரிசையாக நடைபெற்றது.
இதில் அண்டை நாடுகளின் தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், தொழில் அதிபர்கள், திரையுலக பிரபலங்கள், பாஜகபிரமுகர்கள் உள்ளிட்ட 8,000 பேர்பங்கேற்றனர். ஆனால் அழைக்கப்படாத ஒரு விருந்தினர் கேமராவில் சிக்கியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மத்திய அமைச்சராக பாஜக எம்.பி. துர்கா தாஸ் உய்கே பதவியேற்று, உறுதிமொழி படிவத்தில் கையெழுத்திட்ட பிறகு வணக்கம் செலுத்துவதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நோக்கி சென்றார்.
அப்போது, பின்னணியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பூனை போன்ற விலங்கு நடந்து செல்வதுபோல் வீடியோவில் காணப்படுகிறது. இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த விலங்கு, சிறுத்தையா அல்லது பெரிய அளவு பூனையா, அல்லது வேறு ஏதேனும் விலங்கா எனத் தெரியவில்லை. குடியரசுத் தலைவர் மாளிகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதும் இந்த விலங்கு எப்படி வந்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக சமூக வலைதள பயனாளர் ஒருவர், “வால் மற்றும் நடையின் அடிப்படையில் அது சிறுத்தை புலி போல் தெரிகிறது. மக்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள். அது அமைதியாக கடந்து சென்றுவிட்டது” என்று கூறியுள்ளார்.
“இது அனேகமாக வளர்ப்பு பூனையாக இருக்கலாம்” என மற்றொரு பயனாளர் கூறியுள்ளார்