மறைமுக ராணுவம் பலம்: வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் உறுதி

சியோல், அக். 13- வட கொரியா, உலக நாடுகளின் கண்ணுக்குத் தெரியாத வகையில் ராணுவ பலத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
வட கொரியாவில் ஆளும் கட்சியின் 76வது ஆண்டு விழாவை முன்னிட்டு, ராணுவக் கண்காட்சி நடந்தது.இதில் கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள், நிலம் மற்றும் நீரில் செலுத்தவல்ல நவீன ஏவுகணைகள், உயர் தொழில்நுட்ப ராணுவ தளவாடங்கள் ஆகியவை இடம் பெற்றிருந்தன.இந்த கண்காட்சியை வட கொரிய அதிபர் கிம் ஜங் உன் பார்வையிட்டார்.
இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது: நம்முடன் விரோதம் இல்லை என, அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. அதை நம்பும்வகையில், அமெரிக்காவின் செயல்பாடுகள் இல்லை. தொடர்ந்து நம்மை விரோதியாகவே அமெரிக்கா பார்க்கிறது. அமெரிக்கா தன் தவறான முடிவுகள் மற்றும் செயல்களால் இந்த பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரிய தீபகற்பத்தில் ஸ்திரமற்ற சூழலை உருவாக்குவதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது.
அதனால் பிற நாடுகள் அறியா வகையில், யாராலும் வெல்ல முடியாத ராணுவ ஆற்றலை உருவாக்க, நாம் உறுதி எடுத்துள்ளோம், நாம் ராணுவ பலத்தை அதிகரிக்க, அதிகம் செலவிடுவதாக, தென் கொரியா விமர்சிக்கிறது. தென் கொரியாவிற்காக நாம் ராணுவ பலத்தை அதிகரிக்கவில்லை. தென் கொரியா உடன் மீண்டும் போர் புரியவும் நமக்கு விருப்பமில்லை. ஆனால், அமெரிக்கா நம் மீது பகைமை பாராட்டுகிறது. அமெரிக்கா நம் மீது விதித்துள்ள தடைகளை விலக்குவதுடன், தென் கொரியா உடன் நடத்தும் கூட்டு ராணுவ பயிற்சியை நிறுத்த வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.