மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன்: அரை இறுதியில் பி.வி.சிந்து

கோலாலம்பூர், மே 25-மலேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார். மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, 6-ம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹான் ஒய் யு-வை எதிர்த்து விளையாடினார். இதில் உலகத் தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ள சிந்து 21-13, 14-21 21-12 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 55 நிமிடங்கள் நடைபெற்றது. அரை இறுதி சுற்றில் சிந்து, தாய்லாந்தின் பூசனன் ஓங்பாம்ருங்பனுடன் மோதுகிறார். மற்றொரு இந்திய வீராங்கனையான அஸ்மிதா சாலிஹா தனது கால் இறுதி சுற்றில், சீனாவின் ஹெங் யி மானிடம் 10-21, 15-21என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார்.