குன்னூர்: அக். 19: நீலகிரி மாவட்டம் குன்னூரில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மலைப் பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் மலை ரயில் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது.நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. குன்னூர் மலை ரயில் பாதையில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டு, தண்டவாளத்தில் பாறைகள் விழுந்தன.
நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு 188 பயணிகளுடன் மலை ரயில் புறப்பட்டது. கல்லாறு – ஹில்குரோவ் இடையே மண் சரிவு ஏற்பட்டு, தண்டவாளத்தில் பாறை விழுந்தது குறித்து ரயில்வே ஊழியர்கள் தகவல் அளித்ததையடுத்து, கல்லாறு ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது.