மழை மண் சரிவு 4 பேர் சாவு

பெங்களூர்: ஆகஸ்ட். 2 – கடந்த சில நாட்களாக இடைவெளி விட்டிருந்த மழை தற்போது மீண்டு தன் ஆர்பாட்டத்தை துவங்கியுள்ள நிலையில் உத்தர கன்னடா மாவட்டத்தின் பட்கலா வில் பெய்த கனத்த மழையால் வீடுகள் மீது மண் சரிந்து விழுந்ததில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் நாராயண் நாயக் , இவருடைய மகள் லட்சுமி நாராயண் நாயக் , மகன் அனந்த் நாராயன் நாயக் மற்றும் தங்கையின் மகன் பிரவீன் ராமக்ரிஷ்ண நாயக் என அடையாளம் காணப்பட்டுள்ளது . நேற்று பெய்த பேய் மழைக்கு குக்கே சுப்ரமண்யா அருகில் வீட்டின் மீது மண் சரிந்து இரண்டு குழந்தைகள் இறந்துள்ள அடுத்த நாளே பட்கல்லில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தவிர மண் சரிந்து விழுந்த பின்னர் ஜெ சி பி யந்திரம் உடனே சம்பவ இடத்திற்கு வர முடியாததால் அக்கம் பக்கத்தாரே மீட்பு பணிகளில் ஈடுபட்டுவந்துள்ளனர். மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் பெய்து வரும் கனத்த மழையால் ரயில் போக்குவரத்தும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது . கொங்கன் ரயில்வே ஒரு ரயிலின் போக்குவரத்தை ரத்து செய்துள்ளது.

தவிர மேலும் சில ரயில்களின் கால அட்டவணை மாற்றப்பட்டுள்ளது . பட்கல் தாலூகாவின் முருடேஸ்வரா மற்றும் பட்கல் இடையேயான ரயில்பாதை முழுதும் நீரில் மூழ்கியுள்ளன. கொப்பலா மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட அதிகாரி எம் சுந்தரேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அங்கனவாடி , ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழையின் ஆர்பாட்டம் தீவிரமடைந்திருப்பதுடன் , மக்களின் இயல்பு வாழக்கை முற்றிலும் சீரழிந்துள்ளது. இந்த தொடர் மழையால் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் அலுவலர்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. தாவணகெரே மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் சாலைகள் மற்றும் பாலங்கள் முழுதும் நாசமடைந்துள்ளன. இதனால் ஹொன்னாளி , மற்றும் நியாமதிக்கிடையே தொடர்பு முழுதும் துண்டிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு முதல்வர் பசவராஜ் பொம்மையின் அரசியல் செயலாளர் எம் சி ரேணுகாச்சார்யா நேரில் வந்து ஆய்வுகள் மேற்கொண்டார். இந்த தொடர் மழையால் மாவட்டத்தின் ஏரிகள் குளங்கள் நிரம்பி வழிகிறது . விஜயநகர் மாவட்டத்திலும் மழையால் பெரும் சேதங்கள் ஏற்பட்டிருப்பதுடன் இங்கு மிக அதிகளவில் பயிர்கள் நீரில் மூழ்கி மற்றும் அடித்து செல்லப்பட்டு நாசமாகியுள்ளன. ஹோஸபேட்டே தாலுகாவில் தர்மசாகரத்தில் பருத்தி மற்றும் மிளகாய் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமடைந்துள்ளன. ஹம்பியில் கட்டிராம்புரத்தில் வாழை தோட்டங்களில் மழை வெள்ளம் புகுந்ததில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.