மாடு முட்டி முதியவர் உயிரிழப்பு

சென்னை: அக்டோபர் . 28 -திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே காளை மாடு முட்டியதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் உயிரிழந்தார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே கடந்த அக் 18ம் தேதி காலை 6 மணிக்கு சுந்தரம்(80) என்ற முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் 3க்கும் மேற்பட்ட மாடுகள் நின்று கொண்டிருந்தது. அதில் காளை மாடு ஒன்று திடீரென நடந்து சென்ற முதியவரை வயிற்றில் முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் ரத்த காயத்தில் மயங்கி கிடந்தார்.அப்போது சாலையில் வந்த வாகன ஓட்டிகள் மாடுகளை அங்கிருந்து துரத்த முயன்றனர்.
ஆனால் அவர்களையும் மாடுகள் முட்ட பாய்ந்ததால் அவர்கள் அங்கிருந்து விலகி சென்றனர். பின்னர் சாலையில் ரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் அசைவின்றி முதியவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அப்போது வாகன ஓட்டிகள் சம்பவம் குறித்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதியவரை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். வயது மூப்பு காரணமாக அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி முதியவர் சுந்தரம் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.