மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000

சென்னை: ஜூன் 15-
அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 அளிக்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.பள்ளிக்கல்வித் துறை சார்பில், 2023-2024-ம் கல்வி ஆண்டில் 10, 12-ம்வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா, தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் விழா, 67-வது தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா, அரசுப் பள்ளிகளில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (ஸ்மார்ட் கிளாஸ்) தொடக்க விழா ஆகிய ஐம்பெரும் விழா சென்னை நேருஉள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பொதுத் தேர்வில் தமிழ் பாடத்தில்100-க்கு 100 மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள், தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றமாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்குதல், அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை ஆகிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:
காலை உணவு, இல்லம் தேடிகல்வி, நான் முதல்வன், எண்ணும்எழுத்தும் என பள்ளிக்கல்வித் துறையில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில்,மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம் குறிப்பிடத்தக்கது.தேர்தல் பிரச்சாரத்தின்போது, நான் சந்தித்த மாணவிகள்அனைவரும் இதை பாராட்டினர்.அந்த மகிழ்ச்சி மாணவர்களின் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்காக, மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியிருந்தேன். ஆகஸ்டில் இருந்து மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும்.