மாணவர்கள் கட்டணமின்றி பயணிக்கலாம்

சென்னை: மே 29:
போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு பேருந்துகளில் பயணிப்பதற்கான கட்டணமில்லா பயண அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான புதிய பேருந்து பயண அட்டைக்கான விவரங்கள் சேகரித்து, அச்சடித்து, லேமினேஷன் செய்து வழங்குதலில் உள்ள கால அளவு போன்றவற்றை கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கிடையே, வரும் 6-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே, போக்குவரத்துத் துறையால் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கும் வரை அரசு பேருந்துகளில் பள்ளி மாணவர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பழைய அடையாள அட்டையை நடத்துநர்களிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்கலாம்.
இதே நடைமுறை தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட மாணவர்களுக்கும் பொருந்தும். இது தொடர்பாக நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை மீறி சீருடையில் உள்ள மாணவர்களை அல்லது அடையாள அட்டைகளை வைத்திருக்கும் மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் நடத்துநர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.