மாணவிகளுக்கு இலவச சைக்கிள்: தேர்தல் அறிக்கை வெளியிட்டது பிஜேபி

சிம்லா, நவ. 7- இமாச்சல பிரதேசத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக கூறியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அங்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: இமாச்சலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம். இதற்காக நிபுணர் குழு அமைக்கப்படும். இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு மரியாதை அளிக்கப்படும். மாநிலத்தில் மேலும் 5 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்படும். திறன் மேம்பாட்டுக்கு ரூ.900 கோடி நிதி ஒதுக்கப்படும். அரசு ஊழியர்களின் சம்பளத்தில் உள்ள வேறுபாடுகள் அகற்றப்படும். அரசு வேலையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும். மாநிலத்தில் 8 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படும். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் பாஜக கூறியுள்ளது.