மாநகராட்சி தீ விபத்து: தர உறுதி ஆய்வகம் மாற்ற முடிவு

பெங்களூரு, ஆக. 17: பெங்களூரு மாநகராட்சியில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து தர உறுதி ஆய்வகத்தை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நிகழாமல் இருக்க, ஆய்வகத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்தவும் பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
தீ விபத்தில் 9 பேர் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானதைத் தொடர்ந்து, தர உறுதி ஆய்வகத்தை புதிய இடத்திற்கு மாற்ற பெங்களூரு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தற்போதுள்ள வளாகத்தில் இருந்து ஆய்வகம் தொடர்ந்து செயல்படும் நிலையில், தற்போது கட்டப்பட்டு வரும் பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள புதிய கட்டிடத்திற்கு பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
புதன்கிழமை, பெங்களூரு மாநகராட்சி (பிபிஎம்பி) ஆய்வகத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க தனியார் நிறுவனங்களை ஈடுபடுத்த முடிவு செய்ததுள்ளது. இதனால் இது போன்ற தீ விபத்துகள் மீண்டும் நிகழாது என்று கருத்தப்படுகிறது.
“நாங்கள் பொதுப்பணித் துறை உட்பட மூன்று நிறுவனங்களை அணுகினோம். இது போன்ற ஒரு ஆய்வகம் பிஎம்எஸ் பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டுதலுக்காக சாலை தொழில்நுட்பத்திற்கான ரஸ்தா மையம் ஆகியவற்றில் உள்ளது என்று ஆய்வுக்கு பொறுப்பான பிஎஸ் பிரஹலாத் கூறினார்.
முதற்கட்ட விசாரணையில், விபத்து நடந்த நாளில் பிடுமினை சோதனை செய்து கொண்டிருந்த இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்களுடன் பிரஹலாத் ஆய்வகத்தை ஆய்வு செய்தார். “பிட்மென்னின் தரத்தை சோதிக்க பென்சீனைப் பயன்படுத்துவது ஒரு நிலையான நடைமுறையாகும். விபத்து நடந்த நாளில், பென்சீன் நழுவியது. இது மிகவும் எளிதாக பற்றி எரியக்கூடிய ஆவியாகும் ரசாயனமாகும். இதனால் வெப்ப அலை ஏற்பட்டது,” என்று பிரஹலாத் கூறினார்.
விபத்தின் போது எந்த ஆவணங்களும் அழிக்கப்படவில்லை. கருவிகளுக்கு ஏற்பட்ட சேதத்தைத் தவிர, பல்புகள் மற்றும் மின்விசிறிகளின் வெளிப்புற அடுக்குகள் உட்பட கிட்டத்தட்ட அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும் உருகிவிட்டன என்று பிரஹலாத் கூறினார்.
தீ விபத்தின் காரணத்தை அறிய, மாநில அரசு தொடங்கியுள்ள மூன்று தனித்தனி விசாரணைகளில் பெங்களூரு மாநகராட்சியின் உள் விசாரணையும் ஒன்றாகும். தற்போது விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒன்பது ஊழியர்களுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பிபிஎம்பி ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 9 பேரில், 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக‌ மருத்துவர்கள் தெரிவித்தனர்.