மாயாவதியின் மனதில் இருப்பது என்ன? மக்களவை மகா யுத்தம்

புதுடெல்லி, ஏப். 26- மக்களவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் நிலைப்பாடு குறித்துத் தொடர்ந்து விவாதிக்கப்பட்டுவருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலோ, எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியிலோ இடம்பெறாமல் தனித்தே களம் காண்கிறது பகுஜன் சமாஜ் கட்சி. இண்டியா கூட்டணித் தலைவர்கள் பல முறை அழைத்தும் அதை ஏற்க மாயாவதி முன்வரவில்லை. அவரது வியூகம்தான் என்ன? பாஜகவுக்கு மறைமுக ஆதரவா? நான்கு முறை உத்தரப் பிரதேச முதல்வராக இருந்த மாயாவதி, தனது ஆட்சிக்காலத்தில் தலித் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கணிசமாகப் பங்களித்தார். உத்தரப் பிரதேசத்தின் பல கிராமங்களுக்கு மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தந்தார். 2012 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின்னர், மாயாவதியின் தீவிர அரசியல் செயல்பாடுகள் மெல்ல மெல்லக் குறையத் தொடங்கின. குறிப்பாக, தலித் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து காத்திரமான கருத்து தெரிவிக்காமல் அமைதி காப்பது மாயாவதியின் பின்னடைவுக்கான அத்தாட்சி என விமர்சிக்கப்படுகிறது. பல்வேறு கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை மாயாவதி விலக்கிக்கொள்ளவில்லை. அவர் மீது சிபிஐ விசாரணை இருந்ததுதான், அதற்குக் காரணம் எனப் பேசப்பட்டது. மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் மாயாவதியின் மெளனம் இன்னும் இறுகியது. அதற்கும் அவர் மீதான ஊழல் வழக்குகளே காரணம் எனக் கூறப்படுகிறது. காஷ்மீரில் 370ஆவது சட்டக்கூறு ரத்து, முத்தலாக் தடைச் சட்டம், பொருளாதாரத்தில் நலிந்த உயர் வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு என மோடி அரசு கொண்டுவந்த பல மசோதாக்களைப் பகுஜன் சமாஜ் கட்சி ஆதரித்தது. இப்போது பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்படக் கூடாது என்பதற்காகவே பகுஜன் சமாஜ் கட்சி தனித்து நிற்பதாகப் பேசப்படுகிறது. இந்தியாவின் மிக முக்கியமான தலித் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் இந்நிலைப்பாட்டால், தலித் வாக்குகள் சிதறுண்டு பாஜகவுக்குச் சாதகமான சூழலை உருவாக்கலாம் என்பதுதான் அரசியல் பார்வையாளர்களின் கருத்து. அதேவேளையில், பிற கட்சிகளைப் போலவே பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்தும் எம்பி-க்கள்,எம்எல்ஏ-க்கள் பாஜகவுக்குத் தாவுவதும் ஒருபுறம் அரங்கேறிவருகிறது. சிலவிஷயங்களில் பாஜகவுக்குப் பதிலடிகொடுக்க மாயாவதியும் தயங்கு வதில்லை. மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் மதுரா, அலிகர் தொகுதிகளில் பாஜகவிலிருந்து வந்த சுரேஷ் சிங், ஹிதேந்திர குமார் ஆகியோரைத்தான் களமிறக்கியிருக்கிறது பகுஜன் சமாஜ் கட்சி.கூட்டணிக் கணக்குகள்: அரசியல் எதிரிகளிடமிருந்து மாயாவதி நிரந்தரமாக விலகியிருப்பதில்லை.