மார்ச் 2-வது வாரத்தில்அதிமுக கூட்டணி அறிவிப்பு

சென்னை: பிப். 26: மார்ச் 2-வது வாரத்தில் அதிமுக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாளையொட்டி ராயபுரத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும் என பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்திருக்கிறார். எனக்கு தெரிந்தவரை எப்போதும் மார்ச் 2-வது வாரத்தில் தான் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும். இன்னும் 10 நாட்களுக்கு மேல் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் கூட்டணி குறித்து நான் எதுவும் கூறமுடியாது. அதிமுகவுக்கு ஒரு தனித்தன்மை இருக்கிறது. கூட்டணி வைத்துதான் தேர்தலை சந்திக்க வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இருந்ததில்லை. கூட்டணி என்பது கூடுதல் பலம் அவ்வளவுதான்.
இன்னும் 2 வாரங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுவிடும். நல்ல கூட்டணி அதிமுக தலைமையில் அமையும். ஓபிஎஸ், தினகரன், அண்ணாமலை, திமுகவினர் தேர்தலுக்காக ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இது தேர்தலில் எடுபடப் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.