மார்த்தாஸ் மருத்துவமனை கூரை இடிந்து 4 பேர் காயம்

பெங்களூர்: மே. 31 – நகரின் நிருபதுங்கா வீதியில் உள்ள மார்தாஸ் மருத்துவமனையில் இன்று காலை கட்டுமான நிலையில் இருந்த கூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் படுகாயமடைந்துள்ளதுடன் மேலும் மூன்று பேர் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளனர். மார்தாஸ் மருத்துவமனையில் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருவதுடன் இந்த பணிக்கு அதிகாலையிலேயே வந்திருந்த தொழிலாளர்கள் மும்முரமாக பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாலை ஆறு மணியளவில் திடீரெனெ மேற்கூரை இடிந்துள்ளது. இந்த இடிபாடுகளில் நான்கு பேர் சிக்கிக்கொண்டனர். மற்றவர்கள் சத்தம் கேட்டவுடன் வெளியே ஓடி வந்து தப்பித்துள்ளனர் . உடனே மருத்துமனை ஊழியர்கள் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினர் முதலில் இரண்டு பேரை காப்பாற்றியுள்ளனர் பின்னர் இன்னும் ஆழத்தில் சிக்கிக்கொண்டவர்களை ஜெ சி பி யந்திரம் பயன்படுத்தி முதலில் ஒருவறையும் பின்னர் வேறொருவரையும் காப்பாற்றியுள்ளனர். கடைசியில் வெளியே எடுக்கப்பட்ட தொழிலாளிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவனின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது. ராய்ச்சூரை சேர்ந்த கூலி தொழிலாளர்களான மோயினுதுதீன் , சாந்த் பாஷா , ரபீஸாப் ஆகியோர் காப்பாற்றப்பட்டிருப்பதுடன் இவர்கள் சிறு காயங்களுடன் தப்பித்துள்ளனர். கடைசியில் மீட்கப்பட்ட பசவராஜ் என்பவரின் நிலை தீவிரமாயிருந்தாலும் அவரும் உயிராபத்திலிருந்து தப்பித்துள்ளார் என மத்திய பிரிவு டி சி பி டாக்டர் எஸ் டி ஷரணப்பா தெரிவித்தார். கூரை இடிந்து விழுந்து அதனடியில் சிக்கிய காயமடைந்தோர் உட்பட நான்கு பேரும் உயிராபத்திலிருந்து தப்பியுள்ளனர். இந்த திட்ட பணிகளின் விவரங்களை பரிசீலித்து இதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஷரணப்பா தெரிவித்தார் . ராய்ச்சூரை சேர்ந்த ரபீ சாப் நகருக்கு வேலை தேடி வந்து இரண்டு வருடங்களாக மடிவாளாவில் வசித்து வருகிறார். அவர் தண்ணீர் அடைப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். மற்றொருவர் காரை வேலை செய்து வந்துள்ளார். சுமார் அறுபது அடிகள் உயர கூரை இடிந்து விழுந்ததால் ஜெ சி பி யந்திரம் பயன் படுத்தி மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தவிர இந்த கூரைக்கு அறுபது அடி உயர கம்பங்கள் அமைக்கப்பட்டிருந்ததாலேயே கூரை இடிந்து விழுந்திருக்கலாம் என கருதபடுகிறது.