மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்தர்மபுரி,பிப்.24-
கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், தர்மபுரி அடுத்த நல்லம்பள்ளி தாசில்தார் அலுவலகம் முன்பு
குடியேறும் போராட்டம் நேற்று நடத்தினர். இந்த போராட்டத்திற்கு பகுதி குழுத் தலைவர் துளசி தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். இதில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 3 ஆயிரம் வழங்கப்படுவதுபோல் தமிழகத்திலும் குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5 ஆயிரமும் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் துறை பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத இடங்கள் உத்திரவாதப்படுத்த அமலில் உள்ள ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 வலியுறுத்துகிறது, எனவே தனியார் துறை பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத வேலைவாய்ப்பு இடங்களை உத்தரவாதப்படுத்த தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த குடியேறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷமிட்டனர்.