மாலத்தீவின் 3 அமைச்சர்கள் நீக்கம்

மாலே:ஜன. 8: பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்த மாலத்தீவின் 3 அமைச்சர்கள் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2, 3-ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக லட்சத் தீவு சென்றிருந்தார். அந்த பயணத்தின் புகைப்படங்கள், வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
அதோடு அவர் வெளியிட்ட பதிவுகளில், “லட்சத்தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அங்கு வாழும் மக்களின் அரவணைப்பையும் கண்டு பிரமிக்கிறேன். அகத்தி, பங்காராம், கரவெட்டி ஆகிய இடங்களில் மக்களோடு உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் விருந்தோம்பலுக்கு நன்றி. சாகச சுற்றுலா பயணத்தை விரும்புவோருக்கு லட்சத்தீவு மிகச் சிறந்த இடம். நான் ஸ்நோர்கெலிங் பொழுதுபோக்கில் ஈடுபட்டேன். கவச உடையில் நீருக்கடியில் மூழ்கியது புதிய அனுபவமாக இருந்தது” என்று தெரிவித்தார்.
கூகுளில் முதலிடம்: பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைதளங்களில் வெளியிட்ட புகைப்படங்கள், வீடியோ பதிவுகள் வைரலாக பரவின. பிரதமரின் பயணம் காரணமாக கடந்த 2 நாட்களாக கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாக லட்சத் தீவு தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுலாத் துறையை நம்பி வாழும் இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு அதிர்ச்சி அடைந்தது.
மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறு: பிரதமர் மோடியின் பயணம் குறித்து மாலத்தீவு நாட்டின் இளைஞர் நலத் துறை இணை அமைச்சர் அப்துல்லா மஹ்சூம் மஜித், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “மாலத்தீவுக்கு மாற்றாக இந்தியாவின் லட்சத்தீவை மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக மாற்ற பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்கிறார்.மாலத்தீவை இந்தியா குறிவைக்கிறது” என்று குற்றம்சாட்டியிருந்தார்.